Sunday, August 23, 2009

விபத்து

சரியான நேரத்தில்,
சரியான நபர்களின்,
சரியான எண்ணங்களை,
சரியாகவே இல்லாமல்,
தப்பாகவே புரிந்து கொள்ளும்,
சரியான மனிதர்களின்,
தவறான செயல்கள் !!!

மாமியார்

கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கருவறை காவியம் !!!

குடிகாரன்


ஆர்வத்தில் ஆரம்பித்து,
பொழுது போக்காய் தொடர்ந்து,
ருசிக்கு அடிமையாகி,
வடிகால் என நினைத்து,
தன்னையும் அழித்து,
பிறரையும் வதைக்கும்,
புத்தியில்லா புருஷர்கள் !!!

இதுவா கௌரவம் ???


எரிகிற வீட்டில்,
பிடுங்கிய மட்டும்,
லாபம் போல்,
மருமகன் என்ற,
மமதையில்,
மாமியார் வீட்டையே,
மொட்டை அடிப்பது!
கால் வயறு,
கஞ்சி குடித்தாலும்,
கட்டுவதென்னவோ,
காஞ்சிப்பட்டு தான் !!!

மகாத்மா



உண்மை!எளிமை!
கடமை!நேர்மை!
இவை பேச்சாக நில்லாமல்,
உயிர் மூச்சாகவும்,
சுவாசித்தவர் !!!

விவாகரத்து

ஒரு மனதாக,
இருவர் பேசிக்கொள்ளாமல்,
மூன்று முடிச்சு பந்தத்தை,
நான்கு சுவர் தாண்டி,
ஐந்தாம் மனிதர்களிடம்,
ஆறறிவு இல்லாமல்,
ஏழேழு ஜென்மத்திற்கும் சேர மாட்டோம் என்று,
எட்டு திசைக்கும்,
முரசு கொட்டி சொல்லும்,
பரிகாச பத்திரம் !!!

Friday, August 14, 2009

சரித்திரம்


பாழடைந்த கோட்டைகளும்!
சிதிலமான சிற்பங்களும்!
குப்பை கூளமான,
குடைவரை கோயில்களும்!
பறை சாற்றிக்கொண்டிருப்பது,
கற்கால சரித்திரத்தை மட்டுமல்ல,
இக்கால மக்களின்,
மகத்துவத்தையும் தான் !!!

நிழல்



உண்மையான,
உருவங்களே,
உபயோகப்படாத,
உலகத்தில்,
தன்,
நிழலையும்,
தாரை வார்த்துக்கொண்டிருக்கும்,
மாசில்லா,
மரங்கள் !!!

தற்கொலை

மனோபலம் அற்றவரும்!
தன்னம்பிக்கை இல்லா,
கோழைகளும்!
சுய சிந்தனையற்ற,
இருளர்களும்!
தனக்குத் தானே,
கட்டிக்கொள்ளும்,
கல்லறை !!!

விபச்சாரி

ஆதி முதல்,
இன்று வரை,
ஆட்சிகள் மாறினாலும்,
பங்குச் சந்தை வீழ்ந்தாலும்,
லாபம் ஈட்டிக்கொண்டிருக்கும்,
ஒரே முதலாளி !!!

ஏமாற்றம்


வானமும்,
மேகமும் போல்,
எப்போதும் இணைந்திருப்போம் நாம்!
நம்,
நிழல்கள் பிரிந்து கூட,
யாரும் பார்த்ததுஇல்லை!
என்,
சிறு கண்ணசைவிற்க்கும்,
அர்த்தம் தெரிந்தவள் நீ!
காதலர்களாகவே எண்ணினர்,
நம்மை பார்க்கும் பலர்!
மணப்பெண அண்ணனாக,
உன்னை தாரைவார்த்த போது தான்,
அத்தனை கண்களிலும்,
எத்தனை ஏமாற்றம் !!!

குழந்தை

குடம் குடமாய்,
பால் அபிசேகம்!
கட்டி கட்டியாய்,
தங்க வேண்டுதல்!
இத்தனை செய்தும்,
கருவறை கதவு,
திறக்கவில்லை!
கண்ணீருடன் பார்த்தேன்,
பசியில் அழுகின்றன,
பல குழந்தைகள்,
எதிர் விடுதியில்!
மனதில் ஒரு மின்னல்!
எதிர் விடுதி,
குழந்தைகளுக்கு,
இப்போது,
ஒரே அம்மா அப்பா !!!

ஆபாசம்

என் குழந்தையின்,
வெற்றிக்கு காரணம்,
ராதா பால் !!!
ஒரு கையில்,
குழந்தையுடனும்,
பாதி மார் தெரியுமாரும்,
சிரித்துக் கொண்டிருந்தாள்,
விளம்பர நடிகை!
அம்மா,
நீயும்,
இப்படியே டிரஸ் பண்ணிக்கோ!
ஐந்து வயது குழந்தை,
அறியாமல் சொன்னது!
அம்மா பாசத்தையும்,
ஆபாசத்தையும்,
சேர்ந்து சொன்ன,
விளம்பரத்தை பார்த்து !!!

உண்மை

அன்பு என்பது தூய்மை!
அறிவு என்பது வாய்மை!
துணிவு என்பது ஆண்மை!
துறவு என்பது இறைமை!
அடக்கம என்பது நேர்மை!
அழகு என்பது தாய்மை!
இவை அனைத்துக்கும் வேண்டியது பொறுமை!
ஆனால்,
யாராலும்,
அது முடியாதது தான்,
உண்மை !!!

இட ஒதுக்கீடு

அன்னையாய் அரவணைத்து!
தாரமாய் தன்னை தந்து!
மகளாய் மகிழ்வு தந்து!
தோழியாய் தெம்பூட்டும்,
இந்த இனியவளுக்கு,
இட ஒதுக்கீடு,
முப்பத்து மூன்று தானாம்!
மடையர்களே!
இம் முதல்,
மூவரும் இல்லாவிடில்,
உம் மூன்று வாழ்க்கையும்,
வெறுமை தான் !!!

இலவசம்


மூன்று பெட்டி,
சிகரெட் வாங்கினால்,
நரகத்திற்கு விசா,
முற்றிலும்,
இலவசம் !!!

Saturday, August 1, 2009

பொக்கிஷம்


சிலருக்கு பணம்!
பலருக்கு பொன்!
சிலருக்கோ பதவி!
என்னைப் பொறுத்த மட்டில்,
நல்ல நட்பு தான்,
யாவருக்கும் பொக்கிஷம் !!!

அநாதைகள்


புனிதமான,
புணர்தலை,
புதர் மறைவிலும்,
கூடா உறவிலும்,
புத்தி இல்லாமல்,
அரங்கேற்றிவிட்டு,
உதித்த முத்தை,
உதறி விட்டு போவதால்,
விளையும்,
பாவ மொட்டுகள் !!!

சந்தேகம்

மெத்த படித்த,
மருத்துவரும்,
மந்திர,
மருந்துகளும்,
குணப்படுத்தமுடியாத நோய்!
உயிரானவர்களை பிரித்து,
உணர்வுகளைக் கொல்லும்,
கொடிய பேய்!
உன் அறிவை வளர்க்கும்,
மாற்றாந்தாய் !!!

கலப்பு திருமணம்

எதிர் வீட்டில்,
ஏக கூச்சல்!
கலப்பு மணம் செய்த மகளை,
கொன்று விட்டாராம் தந்தை!
இந்த காலத்தில்,
இப்படியும் ஒரு மனிதரா ??
எட்டி பார்த்தால் தான்,
தெரிகிறது!
தன் மகள்,
கொணர்ந்தது,
தனக்கு ஒரு,
மருமகளை என்று!
இந்த காலத்தில்,
இப்படியும் ,
சில மனிதர்கள் !!!

முதல் காதல்


அரை டிரவுசர் பருவம்!
பக்கத்து இருக்கை!
எப்போதும் பத்து விரல்கள்,
என் வலது கையில்!
காக்காய் கடி கடித்து,
கடைவாயில் விழும்,
மிட்டாய்கள்!
பரிமாறிக்கொண்ட,
மதிய உணவுகள்!
வார்த்தை அறியாவிட்டாலும்,
வலி தீர்த்த,
கண்ணீர் துளிகள்!
ஐந்து வயதில் தெரியவில்லை,
இதுவும்,
காதலென்று!!!